காதல் திருமணம் செய்துவிட்டு திருமணத்தினை பதிவு செய்ய காதல் ஜோடிகளை பெற்றோர்கள் சினிமா பாணியில் பிரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்ட பகவதி குமார் (24) , ஹரிபிரியா இருவரும் மாதம்பட்டியை அடுத்த குப்பனூர் பகுதியை சேர்ந்தவர்கள்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், குறித்த தம்பதிகள் தங்களது திருமணத்தினை பதிவு செய்ய ஆவணங்கள் எல்லாவற்றையும் கொண்டுவந்து பத்திர பதிவு அலுவலகத்திற்கு வந்துள்ளனர்.
அப்பொழுது தீடீரென அலுவலகத்தில் உள்ளே நுழைந்த பெண் வீட்டார், பெண்ணை மட்டும் இழுத்து வெளியே சென்று உள்ளனர். பெண்ணின் அண்ணன் கார்த்திகேயன் கையில் இருந்த மிளகாய் பொடியை பகவதி குமார் மீது வீசி உள்ளார்.
அதே சமயத்தில் ஹரி பிரியாவின் தந்தை ராமமூர்த்தி, தான் கொண்டு வந்திருந்த அரிவாளால் ஹரி பிரியாவை நோக்கி வெட்டி உள்ளார். அதை தடுத்த அவரது கணவர் பகவதி குமாரின் கையில் விரல்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் அங்கிருந்து தாங்கள் வந்த வாகனத்தில் பெண்ணை இழுத்துச் சென்றனர்.
பத்திர பதிவு அலுவலகத்தில் பட்டப்பகலில் அரிவாள் மற்றும் மிளகாய் பொடி உடன் வந்து தாக்குதல் நடந்த சம்பவம் அங்கு இருந்த பத்திர எழுத்தர்கள் மற்றும் பதிய வந்த வாடிக்கையாளர் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக பகவதி குமாரிடம் புகாரைப் பெற்றுக்கொண்ட பொலிசார் ஹரிபிரியாவை மீட்பதற்கு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.