யாழ். போதனா வைத்தியசாலையில் இரு விடுதிகளை கோவிட் சிகிச்சைப் பிரிவாகப் பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் எஸ். புவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.போதனா வைத்தியசாலையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையடுத்து, முன்னேற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில், இரு மருத்துவ விடுதிகளை 2ஆம் விடுதி மற்றும், 3 ஆம் விடுதிகளை கோவிட் நோயாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணி தாய் ஒருவருக்கு இரட்டைக் குழந்தைகள் பிரசவிக்க இருந்த நிலையில், சத்திர சிகிச்சை மூலம் இரட்டைக் குழந்தைகளை எடுத்தோம். கோவிட் தொற்றுக்கு உள்ளவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்குரிய சகல நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகின்றோம்.
கோப்பாய் பகுதியில் உள்ள கோவிட் சிகிச்சை நிலையத்தில் 380 பேர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் 4 நோயாளர்களுக்குரிய கட்டில்கள் தான் இருந்தன. அவற்றையும் 10 ஆக அதிகரிக்கத் தீர்மானித்துள்ளோம்.
கோவிட் தீவிரமடைந்துள்ளதால், பொது மக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். சுகாதார நடைமுறைகளைக் கடுமையாகப் பின்பற்றி, நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன், சுகாதார அமைச்சின் பணிப்புரைக்கு அமைவாக, சத்திர சிகிச்சைகளை நிறுத்தி வைத்துள்ளோம். அதற்கமைய சில மருத்துவ சேவைகளை மட்டுப்படுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.