திருகோணமலை மாவட்டத்தில் இதுவரை 18 பேர் கோவிட் தொற்றால் மரணித்துள்ளனர்.
இதேவேளை, இதுவரையில் 1831 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிக மரணங்கள் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகம் இன்று வெளியிட்ட அறிக்கையிலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியிலேயே 07 மரணங்கள் சம்பவித்துள்ளன.
உப்புவெளி பகுதியில் ஆறு மரணங்களும், மூதூரில் இரண்டு மரணங்களும், கந்தளாயில் இரண்டு மரணங்களும், கிண்ணியாவில் ஒரு பதிவாகியுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் இரண்டு மரணங்கள் திருகோணமலை மற்றும் உப்புவெளி சுகாதார வைத்திய பிரிவில் பதிவாகியுள்ளது.
இதேவேளை நேற்று வெள்ளிக்கிழமை காலை முதல் இன்று காலை பத்து மணி வரைக்கும் 68 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அதில் 18 பேர் திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
மேலும் உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் எட்டு பேரும், குச்சவெளி பிரதேசத்தில் 8 பேரும், கந்தளாய் பகுதியில் 7 பேரும், மூதூரில் 07 பேரும், பதவிசிறிபுர சுகாதார வைத்திய பணிமனைகுட்பட்ட பகுதியில் 7 பேரும், குறிஞ்சாங்கேணி பகுதியில் 5 பேரும், தம்பலகாமத்தில் 5 பேரும், கோமரங்கடவல பிரதேசத்தில் இருவரும், கிண்ணியாவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டி.ஜீ.எம் கொஸ்தா தெரிவித்துள்ளார்.



















