கோவிட் தொற்றினால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ், இந்த முறை ஊரடங்கு, தடுப்பூசி போன்றவைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.
குறிப்பாக, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், கோவிட் கட்டுப்பாடுகளை மீறினால் கடும் தண்டனை போன்றவை பிரான்சில் அமுலில் இருக்கின்றன.
இந்நிலையில், அதிகரித்து வரும் கோவிட் – 19 நோய்த்தொற்றுகளை அடுத்து, இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் இதனை அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான், துருக்கி, பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சக வலைத்தளத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரான்சில் பயண தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட மொத்த நாடுகளின் எண்ணிக்கை இப்போது 12 ஆக உயர்ந்துள்ளது.
முன்னதாக, இந்தியா, பிரேசில், அர்ஜென்டினா, சிலி மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் வரும் பயணிகள் 10 நாட்களுக்கு கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
கயானாவின் பிரெஞ்சு துறையிலிருந்து வரும் பயணிகளும் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கேப்ரியல் அட்டால், தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் புதிய நாடுகள் சேர்க்கப்படுவதாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.