சீனாவின் மிகப்பெரிய செயற்கைக் கோளின் எச்சங்கள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியப் பெருங்கடலில் வீழ்ந்தன. எனினும் இதன்காரணமாக இலங்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சீனாவின் தயாரிப்பான செயற்கைக் கோளின் பாகங்கள் இந்தியப் பெருங்கடலில் மாலைத்தீவுக்கு அருகே இன்று வீழ்ந்துள்ளதாக சீனாவும் அறிவித்துள்ளது.
இந்த செயற்கைக் கோளின் வீழ்ந்தால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படும் என்று முன்னதாக அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.
பூமியின் மேற்பரப்பில் பெரும்பகுதி நீரால் மூடப்பட்டிருப்பதால், நிலத்தில் மக்கள் தொகை பாதிக்கப்படுவதற்கான பிரச்சனைகள் குறைவாகவே இருந்தன, மேலும் காயங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் குறைவாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.
எனினும் செயற்கைக் கோளின் சுற்றுப்பாதை சிதைவு குறித்த நிச்சயமற்ற தன்மை தொடர்பில் சீனா வலுவான உறுதிமொழிகளை வழங்கத் தவறியதன் காரணமாக பதற்றம் ஏற்பட்டது.
சீனா தனது விண்வெளி நிலையக் கட்டமைப்புக்காக கடந்த மாதத்தில் சீனா லாங் மார்ச் – 5பி என்ற செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது.
இதன் பணி நிறைவடைந்துவிட்டநிலையில் செயற்கைக் கோளின் பாகம் கட்டுப்பாடு இல்லாமல் பூமியை நோக்கி வந்தது. இதனையடுத்து 8 தொன் எடை கொண்ட இந்த செயற்கைக் கோளின் பாகம் பூமியில் எங்கு விழும்? எவ்வாறான விளைவுகளை இது ஏற்படுத்தும்? என்ற அச்சம் வெளியிடப்பட்டு வந்தது.
அப்படி பூமியில் விழும்போது ஏற்படும் விளைவுகள் குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்யவும் தொடங்கினர்.
தற்போது இந்த செயற்கைக் கோளின் பாகம் இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அருகே வீழ்ந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இன்று அதிகாலை பூமியின் காற்று மண்டலத்துக்குள் வந்த செயற்கைக் கோளின் பாகம் சிறிது நேரத்தில் இந்திய பெருங்கடலில் வீழ்ந்து சிதைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமியின் காற்று மண்டலத்துக்குள் இந்த செயற்கைக் கோளின் பாகம் நுழையும்போது பெரும்பகுதி எரிந்துவிடும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. விண்வெளி குறித்து ஆய்வு செய்து வரும் ஸ்பேஸ் டிராக் முகமையும் இந்தத் தகவலை உறுதி செய்துள்ளது.