உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி வரும் உருமாறிய கோவிட் – 19 வைரஸின் திரிபுகள் இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
எந்த உருமாறிய வைரஸ் திரிபுகள் பரவினாலும் அவற்றின் தொற்றில் இருந்து தப்பிக்க முகக்கவசங்களை சரியாக அணிய வேண்டும் என்பதுடன், அடிக்கடி கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
கிருமி தொற்று நீக்கியை பயன்படுத்துவது உட்பட சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டும்.
அத்துடன் ஒரு மாத காலத்திற்கேனும் அவசியமற்ற பயணங்கள் செல்வதை தவிர்த்து வீடுகளில் தங்கியிருந்தால், தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முடியும் எனவும் ஜீவந்திர குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மிகவும் ஆபத்தான நிலைமை ஏற்படலாம் எனவும் ஆபத்தை குறைத்துக் கொள்ள அனைவரும் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தென்னாபிரிக்கா, பிரித்தானியா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா ஆகிய நாடுகளில் பரவும் உருமாறிய வைரஸ் திரிபுகளுடன் இலங்கையில் உருவான திரிபும் கண்டறியப்பட்டுள்ளன.
இது தொடர்பான அனைத்து பரிசோதனைகளையும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகமே மேற்கொண்டு வருகிறது.
இந்த உருமாறிய வைரஸ் திரிபுகள் தனிமைப்படுத்தல் நிலையங்கள் உட்பட சில இடங்களில் மாத்திரம் அடையாளம் காணப்பட்டுள்ளன.
எனினும் இவை சமூகத்திலும் பரவி இருக்கலாம் எனவும் ஜீவந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்டறியப்பட்டுள்ள உருமாறிய வைரஸ் திரிபுகள் இந்தியா மற்றும் பிரித்தானியாவில் மிக வேகமாக பரவி வருகின்றன.
இவற்றின் வியாகுல தன்மையும் அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.