வவுனியாவில் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தல்களை மீறிச் செயற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டுள்ளதுடன், குறித்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார துறையினரால் குறித்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் அச்சுறுத்தல் காரணமாக அரசாங்கத்தினால் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புக்கள், தனியார் வகுப்புக்கள் என்பவற்றை மறு அறிவித்தல் வரை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அறிவுறுத்தல்களை மீறி சில இடங்களில் கல்வி நிலையம் இடம்பெறுவதாகச் சுகாதார பரிசோதகர்களுக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்துடன் கூடிய கல்வி நிலையத்தினை சுகாதார பிரிவினர் முற்றுகையிட்டனர்.
இதன் போது குறித்த சிறுவர் பராமரிப்பு நிலையம் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்டதன் பிரகாரம் இன்று 12.05.2021 தொடக்கம் எதிர்வரும் 25.05.2021ம் திகதி வரையிலான 14 நாட்கள் சுகாதாரப் பிரிவினரால் குறித்த நிலையம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.