பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களை ஒழுங்காக பின்பற்றாவிட்டால் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடுமுழுவதும் முடக்கல் நிலை காணப்படும் காலப்பகுதியில் பொதுமக்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டுமென்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவிவரும் கொரோனா நெருக்கடி நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக போராடும் அனைத்து தரப்பினருக்கும் பொதுமக்கள் தங்கள் ஆதரவை வழங்கவேண்டுமென பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் பொதுசெயலாளர் பாலசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் அறிவித்துள்ள போக்குவரத்துகட்டுப்பாடுகளை பொதுமக்கள் பின்பற்றவேண்டும்,அடுத்த மூன்று நாட்களுக்கு நடமாட்டத்தை கட்டுப்படுத்தவேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசாங்கம் நிலைமையின் பாரதூர தன்மையை உணர்ந்து கொள்வது முக்கியமானதென தெரிவித்துள்ள அவர் மருத்துவமனைகள் சவாலான நிலையை எதிர்கொள்கின்றன, மருத்துவனை கட்டில்கள் நிரப்பிவிட்டன, சுகாதார பணியாளர்கள் திணறுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளின் போது தவறான விதத்தில் நடந்துகொள்வதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ளவேண்டும் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கப்படும் நிலையங்ககுக்கு குடும்பத்தவர்கள் உறவினர்களை அழைத்து வருவதை தவிர்க்கவேண்டுமென தெரிவித்துள்ள அவர், ஒருவர் வசிக்கும் பகுதி போன்றவற்றை உறுதி செய்த பின்னரே தடுப்பூசி வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார்.
பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாவிட்டால் இந்தியா போன்றதொரு நிலைமை உருவாகுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.