கேரளாவில் ஓடும் ஆம்புலன்சில் கொரோனா பாதித்த பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சித்தது தொடர்பாக ஆம்புலன்ஸ் உதவியாளரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
இதையடுத்து அந்த பெண் அப்பகுதியில் உள்ள பெருந்தலமண்ணா அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில் அவருக்கு ஸ்கேன் செய்ய டாக்டர்கள் பரிந்துரைத்தனர்.
ஸ்கேன் எடுப்பதற்காக அந்த இளம்பெண்ணை அருகில் உள்ள ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்கு ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். அந்த ஆம்புலன்சில் பிரசாத் என்பவர் உதவியாளராக இருந்தார். அவர் ஓடும் ஆம்புலன்சில் அந்த இளம்பெண்ணை திடீர் என கட்டிபிடித்து பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார். இதனால் அந்த பெண் கூச்சலிட்டார்.
ஆனால் அதற்குள் ஸ்கேன் சென்டர் இருந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ் வந்து விட்டதால் அந்த வாலிபரின் பலாத்காரம் முயற்சி பலிக்கவில்லை. இந்த நிலையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய அந்த இளம்பெண் மருத்துவ பரிசோதனைக்கு டாக்டரை பார்க்க சென்றார். அப்போது ஆம்புலன்சில் நடந்த வாலிபரின் பாலியல் பலாத்கார முயற்சி குறித்து டாக்டரிடம் கூறினார்.
இதுகுறித்து டாக்டர் வண்டூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். ஆனால் சம்பவம் நடந்த பகுதி பெருந்த லமண்ணா போலீஸ் நிலையம் பகுதி என்பதால் வழக்கு மாற்றப்பட்டது.
இதுகுறித்து பெருந்தலமண்ணா போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்புலன்ஸ் உதவியாளர் பிரசாத்தை கைது செய்தனர்.