நோய் அறிகுறிகள் அற்ற கொரோனா தொற்றாளர்களை வீடுகளில் தங்க வைத்து, சிகிச்சை அளிக்கும் நடைமுறையொன்று தொடர்பில் தற்போது அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.
இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே நேற்று முன்தினம் இந்த விடயத்தை தெரிவித்திருந்த பின்னணியிலேயே, தற்போது குறித்த விடயம் தொடர்பில் அதிகளவில் பேசப்படுகின்றது.
அவ்வாறு தொற்றாளர் ஒருவர் வீட்டில் தங்கியிருக்கும் போது, அவதானம் செலுத்தப்பட வேண்டிய விடயங்கள் என்னவென்பது குறித்து ஆராய்ந்துள்ளதாக விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.
வீட்டிலுள்ள கொரோனா தொற்றாளர்கள் பிரத்தியேகமாக அல்லது தனி அறையொன்றை பயன்படுத்துவது கட்டாயமானது.
குறித்த தொற்றாளர் வீட்டில் கட்டாயம் முகக் கவசத்தை அணிந்திருத்தல் வேண்டும்.
தொற்றாளருக்கு தனியான மலசலக்கூடமொன்று இருக்குமாக இருந்தால், அது சிறந்ததாக அமையும்.
கொரோனா தொற்றாளர் பயன்படுத்தும் பொருட்கள், அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்தால் அது சிறந்தது.
கொரோனா தொற்றாளரின் பணிகளை செய்வதற்காக, வீட்டிலுள்ள சுகதேகி ஒருவர் தெரிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தெரிவு செய்யப்படும் நபர் மாத்திரமே, நோயாளரின் பணிகளை செய்ய வேண்டும்.
கொரோனா தொற்றாளரின் பணிகளை செய்யும் போது, குறித்த நபர் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அத்தியாவசியமானது.
வீட்டில் தங்கியுள்ள கொரோனா தொற்றாளருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்.
கொரோனா தொற்றாளரை வெளிநபர்கள் பார்வையிடுவதை தவிர்க்க வேண்டும். கொரோனா தொற்றாளர் இருக்கும் பகுதியிலுள்ள யன்னல்கள் திறக்கப்பட்டு, காற்று உள்ளே வரும் வகையிலான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த வேண்டும்.
வீட்டில் உரிய வசதிகள் இல்லாத பட்சத்தில், நோயாளருக்கும், குடும்ப உறுப்பினர்களும் இடையில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும் என்பதுடன், முகக் கவசம் அணிந்தித்தல் அத்தியாவசியமானது.
தொற்றாளர் பயன்படுத்தும் பொருட்களை தனியாக வைத்திருத்தல் வேண்டும்.
கொரோனா தொற்றாளர் பயன்படுத்திய பொருட்களில், கிருமிகளை ஒழிக்கும் வகையில் செயற்பட வேண்டும். தொற்றாளர் உள்ள வீட்டை எந்நேரமும் கிருமி ஒழிப்பு திரவம் கொண்டு, கிருமிகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரோனா தொற்றாளருக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் தென்படுமாக இருந்தால், உடனடியாக வைத்திய ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். காய்ச்சல், தடிமன், சாலி போன்ற நோய் அறிகுறிகள் தென்படுவதுடன், சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்படுமாக இருந்தால் அது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான நோய் அறிகுறிகள் தென்படுமாக இருந்தால், அவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட வேண்டும் என விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.