அவுஸ்திரேலிய அரசு புலம்பெயர்வு சட்டத்தில் Migration Amendment (Clarifying International Obligations for Removal) Bill 2021 ல் ஏற்படுத்தியுள்ள புதிய திருத்தம், அகதிகளை வாழ் நாள் முழுவதும் கூட காலவரையின்றி சிறைவைக்கும் ஆபத்துடையது என மனித உரிமை அமைப்புகள் எச்சரித்துள்ளன.
இந்த சட்டத்திருத்தம், அவுஸ்திரேலிய அரசு அகதிகளின் விசாக்களை ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குகின்றது. அதே சமயம், சொந்த நாட்டில் அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள அகதிகளை நாடு கடத்தும் அனுமதியை வழங்க மறுப்பதால், விசா ரத்து செய்யப்பட்ட அகதிகள் காலவரையின்றி சிறைப்படுத்தப்படுவார்கள் என சொல்லப்படுகின்றது.
குணநலன் அடிப்படையில், பாதுகாப்புக்கு ஆபத்தானவர் என்ற ரீதியில், தவறாக செய்கைகளில் ஈடுபடும் கும்பலுடன் தொடர்புடையவர் என்ற வகையில் அவுஸ்திரேலியர்கள் அல்லாதவர்களின் விசாக்களை அவுஸ்திரேலிa அரசு ரத்து செய்து வருகின்றது.
இப்புதிய திருத்தத்தின் மூலம் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த ஒரு நபரின் அகதி அந்தஸ்தை ரத்து செய்து வந்த நாட்டிற்கே திரும்பிச் செல்ல அறிவுறுத்தும் அதிகாரத்தை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு வழங்குகின்றது.
இந்த சட்டம் தொடர்பான அவுஸ்திரேலிய அரசின் விளக்க அறிக்கையில்,
தனிப்பட்ட ஒரு நபரின் தஞ்ச விவகாரத்தில் தலையிட்டு அது பொது நலனுக்கு உட்பட்டது எனக் கருதும் பட்சத்தில், குடிவரவுத் தடுப்பில் உள்ள ஒருவருக்கு விசா வழங்கும் அதிகாரம் புலம்பெயர்வு சட்டத்தின் கீழ் அமைச்சருக்கு உள்ளது.எது பொது நலன் , எது பொது நலனில்லை என்பது அமைச்சரின் முடிவைப் பொறுத்தது,எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சியான லேபர் கட்சியின் உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். அதே சமயம், அகதிகள் காலவரையின்றி தடுத்து வைக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக இச்சட்டத்திருத்தத்தில் எந்த அம்சமும் இல்லை என அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
எந்த பாதுகாப்பும் இல்லாமல் அகதிகளை வாழ்க்கை முழுவதும் சிறைப்படுத்தி வைக்கும் அதிகாரம் அரசுக்கு இருக்கக்கூடாது. வாழ்க்கையை குடிவரவுத் தடுப்பிலேயே கழிப்பதா அல்லது துன்புறுத்தப்படக்கூடிய சொந்த நாட்டுக்கே திரும்பிச் செல்வதா எனும் யோசிக்க முடியாத நிலைக்குள் அகதிகளை தள்ளும் என மனித உரிமைகள் சட்ட மையத்தின் சட்ட இயக்குனர் டேவிட் புர்க் எச்சரித்திருக்கின்றார்.