20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் குறைவாகவே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 20 வயது முதல் 40 வயது வரையிலான பெண்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதால் கருவுறுதல் பாதிக்கும் என கருதி தடுப்பூசியை தவிர்த்து வருகின்றனர்.
இதுபற்றி புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி டீனும், மகப்பேறு நிபுணருமான டாக்டர் பூவதி கூறும்போது, கொரோனா தடுப்பூசி மலட்டு தன்மைக்கு காரணமாகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. கட்டுக்கதைகளால் ஏற்படுத்தப்பட்ட பீதியால் இளம்பெண்கள் தடுப்பூசியை தவிர்க்கிறார்கள். இதில் உண்மை இல்லை. ஆகவே கொரோனாவை தடுக்க இளம்பெண்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என்றார்.
திருச்சி தனியார் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சர்மிளா அய்யாவு பேசும் போது, கர்ப்பிணி பெண்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் வயிற்றில் இருக்கும் குழந்தையை பாதிக்கும் என்றோ, தாயை பாதிக்கும் என்றோ எந்த ஆய்வுகளும் உறுதிப்படுத்தவில்லை. தடுப்பூசி போட்டுக்கொள்வது அந்த கர்ப்பிணி பெண்ணின் உடல் சார்ந்தது. இதில் டாக்டர்தான் தடுப்பூசி வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.
கொரோனா வைரஸ் தடுப்பூசி, கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பானதுதான் என்று அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு கூறுகிறது. மகளிர் மற்றும் மகப்பேறு பத்திரிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகி உள்ளது. இந்த ஆய்வை நடத்திய நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தின் பீன்பெர்க் மருத்துவக்கல்லூரி உதவிப் பேராசிரியர் ஜெப்ரி கோல்டுஸ்டீன் இதுபற்றி கூறுகையில், “கர்ப்பிணிக்கு நஞ்சுக்கொடி என்பது விமானத்தின் கருப்பு பெட்டி போன்றது.
கர்ப்பத்தில் ஏதேனும் தவறு நடந்தால் என்ன நடந்தது என்று கண்டறிய நாங்கள் நஞ்சுக்கொடியின் மாற்றங்களைத்தான் ஆராய்வோம். கொரோனா வைரஸ் தடுப்பூசியை பொறுத்தமட்டில் இது கர்ப்பிணி பெண்களின் நஞ்சுக்கொடியை சேதப்படுத்தாது” என குறிப்பிட்டுள்ளார். கர்ப்பிணி பெண்களிடம் தடுப்பூசி தொடர்பாக நிறைய தயக்கம் இருப்பதாகவும், தங்களது ஆய்வுத்தரவுகள் ஆரம்ப கட்ட தகவல்களாக இருந்தபோதும், கர்ப்ப காலத்தில் தடுப்பூசி ஆபத்து குறித்த கவலையை குறைக்கும் என்றும் கூறி உள்ளார். வருகின்றனர்.