கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தனது தந்தையின் உடலை தருவதற்கு மூன்று லட்ச ரூபாய் கேட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் ’எங்கள் தந்தையின் உடம்பே வேண்டாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்’ என இளம்பெண் ஒருவர் கூறியது மருத்துவமனை நிர்வாகிகளை அதிரவைத்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் என்ற பகுதியை சேர்ந்த ராமசாமி மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமசாமியின் மனைவி மட்டும் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் ராமசாமி 12 நாட்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து ராமசாமியின் உடலை தர வேண்டும் என்றால் மூன்று லட்ச ரூபாய் கட்டணத்தை கட்ட வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய மகள் ஜாஸ்மின் அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை என்றும் எங்கள் அப்பாவின் உடலை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டுச் சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து ஜாஸ்மின் செய்தியாளர்களிடம் கூறியபோது ’தனது தந்தை மற்றும் தாய் ஆகிய இருவருக்கும் ஒரே அறையில் வைத்து தான் சிகிச்சை செய்ததாகவும், ஆனால் இருவருக்கும் தனித்தனியாக அறை வாடகை குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், அதுபோக தேவையில்லாத செலவுகள் கணக்கு காட்டப்பட்டு உள்ளதாகவும் அதனால் தான் சடலத்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறியபோது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு வரும்போது எப்படியாவது காப்பாற்றுங்கள் என நோயாளிகளின் உறவினர்கள் கெஞ்சுகிறார்கள் என்றும், ஆனால் சிகிச்சை முடிந்த பிறகு நியாயமான கட்டணத்தை கூட கட்ட மறுக்கிறார்கள் என்றும், இது வேதனையை தருகிறது என்று கூறியுள்ளனர்.