கோவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கைக்கு வருவதற்கு எதிராக அமெரிக்கர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இலங்கைக்கான புதிய பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதில் கோவிட் தொற்று காரணமாக இலங்கைக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தீவிரவாதம் தொடர்பிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் பரவல் தொடர்பில் 4ஆம் கட்டநிலை பயண சுகாதார அறிவிப்பை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது. இது நாட்டில் மிக அதிகரித்த கோவிட் தொற்றுப்பரவலைக் குறிக்கிறது.
சுற்றுலா இடங்கள், போக்குவரத்து மையங்கள், சந்தைகள், வணிக வளாகங்கள், அரச அலுவலகங்கள், விருந்தகங்கள், உணவகங்கள், வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள்,முக்கிய விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்வுகள் ஆகியவற்றை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் தொலைதூர பகுதிகளில் உள்ள அமெரிக்க குடிமக்களுக்கு அவசரகால சேவைகளை வழங்குவதற்கான மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளே உள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.