சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் அந்த சங்கத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன சுகாதார அமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். கடிதத்தின் பிரதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சங்கத்தினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமைச்சர் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டுமென அவர் குறித்த கடிதத்தில் கோரியுள்ளார்.
அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் ஊழியர்களுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்கவில்லை என்பதோடு, ஊழியர்களுக்கு இடையில் பிளவினை ஏற்படுத்தியதாக அந்த கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட தொழிங்சங்கங்களுடன் மாத்திரம் அமைச்சர் கலந்துரையாடல்களை மேற்கொண்டதோடு, அந்த சங்கங்களை அவரே கையாண்டதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
விஞ்ஞானத்தின் மீது நம்பிக்கை வைக்காமல் கட்டுக்கதைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டதாகவும் அமைச்சர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றினை பயன்படுத்தி பணம் உழைக்கும் துறையாக சுகாதாரத்துறையை மாற்றியமை மற்றும் தகுதியானவர்களை புறக்கணித்து ஓய்வு பெற்றவர்களை சுகாதார அமைச்சின் உயர் பதவிகளுக்கு நியமித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளும் அமைச்சர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
ஊடகங்களில் தவறான கருத்துக்களை வெளியிடும் மேற்கத்தேய வைத்தியர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கத் தவறியதோடு, தடுப்பூசி வழங்கும் செயற்பாட்டை கேலிக்கூத்தாக மாற்றியதாகவும், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறான காரணங்களை அடிப்படையாக் கொண்டு பதவி விலக வேண்டுமென, அரச வைத்திய அதிகாரிகள் மன்றத்தின் தலைவர் வைத்தியர் ருக்சான் பெல்லன, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சிக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.


















