தொடர்ந்தும் சுமார் ஒரு மாத காலமாக அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ளாத அமைச்சர் விமல் வீரவங்ச மீண்டும் அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், அமைச்சரவையில் பரப்பரப்பான பல சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
புல்மோட்டை கனிய மணலை அடிப்படையாக கொண்டு அமைச்சர் மகிந்த அமரவீரவுடன் மோதியுள்ள வீரவங்ச, இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை கட்டுப்படுத்துவது தொடர்பான காரணத்தை அடிப்படையாக கொண்டு நீதியமைச்சர் அலி சப்றியுடன் மோதலை ஏற்படுத்திக்கொண்டுள்ளதாக அமைச்சரவையின் தகவல்கள் கூறுகின்றன.
இஸ்லாமிய அறநெறி பாடசாலைகளை கட்டுப்படுத்தும் பணிகளை கல்வியமைச்சு மேற்கொள்ள வேண்டும் என ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராய்ந்த அமைச்சரவை உப குழு ஆலோசனை முன்வைத்திருந்தது.
இந்த விடயம் சம்பந்தமாக அமைச்சரவை பத்திரம் ஒன்றை ஜனாதிபதி அமைச்சரவையில் தாக்கல் செய்த போது, இஸ்லாமிய அறநெறி பாடசாலைகள் தொடர்பான இந்த பரிந்துரைகளை அமுல்படுத்துவது குறித்து முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட வேண்டும் எனவும் இதன் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு தவறான செய்தி செய்வதை தடுக்க முடியும் எனவும் நீதியமைச்சர் அலி சப்றி தெரிவித்துள்ளார்.
அலி சப்றியின் இந்த நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ள அமைச்சர் வீரவங்ச, பரிந்துரைகளை முன்வைத்த அமைச்சரவை உபகுழுவின் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்ததாகவும் இதனால் மீண்டும் முஸ்லிம் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவது அவசியமற்றது எனவும் கூறியுள்ளார்.


















