இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமக்கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா உற்சவம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஜூலை மாதம் 24ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவுள்ளது.
கொடியேற்றத்திற்கு 45 தினங்களுக்கு முன் நடைபெறும் மரபுரீதியான பாரம்பரிய கன்னிக்கால் அல்லது கொடிக்கால் அல்லது முகூர்த்தக்கால் நடும் சடங்கு இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நேற்று முன்தினம் (27) அதிகாலை 4.30 மணியளவில் கதிர்காமத்தில் சுகாதார முறைப்படி நடைபெற்றது.
இந்நிலையில் நாட்டில் கொரோனாச்சூழல் நிலவுகின்ற காரணத்தினால் சுகாதாரத் துறையின் உத்தரவுகளைத் தொடர்ந்தே 2021 ஆண்டு எசலா விழா ஜூலை 10 ஆம் தேதி தொடங்கி, பிரமாண்ட ஊர்வலத்துடன் ஜூலை 24 அன்று நிறைவடைவது பற்றி முடிவெடுக்கப்படும் என ஆலய நிருவாகம் அறிவித்துள்ளது.
இதேவேளை பாரம்பரிய கதிர்காம பாத யாத்திரை கடந்த வருடத்தை போல் இம் முறையும் தற்போதைய கொரோனா நிலைமையில் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.