இலங்கையில் பெய்து வரும் கடும் மழை காரணமாக டெங்கு, வயிற்றுப் போக்கு மற்றும் எலிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன என்று பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் அறிக்கையூடாக எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன் காரணமாக நாட்டு மக்கள் தமது சுற்றுச் சூழலை நோய் காவிகள் பெருகாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக வீட்டுச் சூழலில் நோய் காவிகள் இனப்பெருக்கம் செய்வதற்கு ஏதுவான இடங்கள் அதிகரித்துள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் ஈக்கள், நுளம்புகள் மற்றும் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கு ஒவ்வொருவரும் தமது சுற்றுச் சூழலில் நீர்த்தேங்கும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதுடன் சுத்தமாகப் பேணுவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டில் டெங்கு காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டில் இதுவரை 7 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 2 ஆயிரத்து 883 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.
அங்கு அதிகமான டெங்கு நோயாளர்கள் வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் பதிவாகியுள்ளனர். எனினும், மே மாதத்தில் இதுவரை 121 டெங்கு நோயாளர்களே மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு அடுத்தபடியாக, கொழும்பு மாவட்டத்தில் 1,229 பேர் இந்த ஆண்டில் டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இதேவேளை, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 2 ஆயிரத்து 699 எலிக்காய்ச்சல் நோயாளர்களும் நாட்டில் இனங்காணப்பட்டுள்ளனர்.
எலிக்காய்ச்சல் காரணமாக காலி, இரத்தினபுரி, ஆகிய மாவட்டங்களில் 350 இற்கும் அதிகமான நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 250 இற்கும் அதிகமான நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.