திருகோணமலை – கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 12 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் 14 நாட்களையும் தாண்டியும் தனிமைப்படுத்தல் விதிபடி முடக்கப்பட்டு உள்ளமையினால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 683 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
இதுவே இம்மாவட்டத்தில் அதிக தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட முதலாவது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவாகும். இருப்பினும் இப்பிரதேசம் தற்போது தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று இரண்டாவதாக 468 அதிகூடிய தொற்றாளர் பிரிவாக உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு முழுமையாகவும், மற்றொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு பகுதியளவிலும் முடக்கப்பட்டுள்ளது.
அடுத்தாக மூன்றாவது இடத்தில் மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு இங்கு 260 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இப்பகுதியும் முடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் நான்காவது இடத்தில் 259 தொற்றாளர்களுடன் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 10 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் இன்றுவரை முடக்கப்பட்டுள்ளமை தொடர்பாக மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதேவேளை கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 170 தொற்றாளர்களும், குச்சவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 163 தொற்றாளர்களும் உள்ளனர். ஆனால் இதுவரை இப்பகுதி முடக்கப்படவில்லை.
மாவட்டத்தில் தொற்றாளர்கள் குறைவாக இருக்கும் குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 160 தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனினும் இப்பகுதியில் இரண்டு கிராம உத்தியோகத்தர் பிரிவு முடக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் தனிமைப்படுத்தல் விதிப்படி முடக்கத்துக்குள்ளான பகுதிகள் 14 நாட்கள் அல்லது 7 நாட்களில் விடுவிக்கப்பட்டாலும் கிண்ணியா, குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் 14 நாட்களையும் தாண்டியும் முடக்கப்பட்டுள்ளமை எவ்விதத்தில் நியாயம் என்பது தொடர்பில் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில், குறித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகள் அசமந்தப்போக்குடன் செயல்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.



















