விசேட வைத்திய நிபுணர்கள் கூறுவதைப் போல் நாட்டை மாதம் முழுவதும் – வருடம் பூராகவும் முடக்கி வைத்துக் கொண்டிருந்தால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ந்துவிடும்.
நாட்டின் சுகாதாரம் பாதுகாக்கப்படுவது அவசியமானதே. ஆனால், அதை விடவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
கோவிட் என்பது உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு தொற்றாகும். நூறு ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறு ஒரு அழிவு வந்தது. இப்போது மீண்டும் அவ்வாறான அழிவொன்று ஏற்பட்டுள்ளது.
இதில் ஏனைய நாடுகளை போன்றே நாமும் பாதிக்கப்பட்டுள்ளோம். ஆகவே, இந்தத் தாக்கங்களுக்கு யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது. ஏனைய நாடுகளை விடவும் நாம் பாதுகாப்பான நிலையில் உள்ளோம் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமல்ல நாட்டின் சுகாதாரத்துறை வீழ்ச்சி காண்பதைப் போல் அல்ல, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டால் பாரிய நெருக்கடியைச் சகலரும் எதிர்கொள்ள நேரிடும்.
ஒரு நாளைக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு மாத்திரம் 800 இலட்சம் ரூபா செலவாகின்றது.
ஏனைய சகல சுகாதார செயற்பாடுகளுக்கும் கோடிக்கணக்கான பணம் செலவாகின்றது. எனவே, நாட்டின் சுகாதாரம் அவசியம். ஆனால், அதைவிடவும் நாட்டின் பொருளாதாரத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றார்.