ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் அந்த மறைகரம் எது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
எரிசக்தி அமைச்சில் தற்பொழுது நடைபெற்று வரும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.
எரிபொருட்களுக்கான விலைகள் உயர்த்தப்பட்டமை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கருத்து வெளியிட்டிருந்தார்.
மக்களை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்திய அமைச்சர் உதய கம்மன்பில பதவி விலக வேண்டுமென அவர் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் கம்மன்பில தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எரிபொருட்களுக்கான விலை உயர்த்தப்படுவதற்கு பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்சவின் எழுத்து மூல அனுமதி அவசியமானது என்பது கூட தெரியாத ஒருவரே பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமரின் புகைப்படத்தை தாங்கிய கடித தலைப்புடனான தாளில் எரிபொருள் விலை ஏற்றம் தொடர்பில் விமர்சனம் செய்தது மூலம் அவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவையே விமர்சனம் செய்துள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடிய வாழ்க்கைச் செலவு குறித்த துணை அமைச்சுக் குழுவினாலேயே எரிபொருள் விலையேற்றம் பற்றிய இறுதித் தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அதனைகூட புரிந்து கொள்ள முடியாத ஒருவர் பொதுஜன முன்னணியின் முக்கிய பதவி வகித்து வருகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் இவ்வாறான கருத்து வெளியிட்டிருந்தால் அவருக்கு விசர் என்று அதை பொருட்படுத்தியிருக்க தேவையில்லை எனவும், கட்சியொன்றின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இவ்வாறு கருத்து வெளியிடுவதனை உதாசீனம் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியும் பிரதமரும் எடுத்த தீர்மானத்தை ஊடகங்களின் முன்னிலையில் அறிவித்தனைத் தவிர வேறு எதனையும் தாம் செய்யவில்லை எனவும் ஜனாதிபதியும் பிரதமரையும் அசௌகரியத்திற்கு உட்படுத்த செயற்படும் அந்த மறைகரம் எது என்பது கண்டறியப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த எரிபொருள் விலையேற்றம் பற்றிய அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் பதிலளிக்க தாம் தயார் எனவும், சாகர காரியவவசம் முடிந்தால் பகிரங்க விவாதம் ஒன்றுக்கு வர வேண்டும் எனவும் இதனை ஓர் சவாலாக விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செயற்பாடுகளின் பின்னணியில் பெசில் ராஜபக்ச செயற்படுகின்றாரா என ஊடகவியலளார்கள் கேள்வி எழுப்பிய போது, தமது பின்னணியில் பெசில் இல்லை எனவும் சாகர பின்னணியில் பெசில் இருக்கின்றாரா தெரியவில்லை அதனை ஆராய்ந்துதான் பார்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
சாகர காரியவசம் தம்மை பதவி விலகுமாறு கோரியதன் மூலம் அவரது அறிவு மட்டத்தை நாட்டு பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தியுள்ளதாக உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.