இந்திய மாநிலம் கேரளாவில் சமூக ஊடகங்களில் பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களின் கருத்துகள் இளைஞரை கொலைக்கு தூண்டியுள்ளது.
கேரளா மாநிலம் கொல்லம் பகுதியை சேர்ந்த 28 வயது ஆதிரா என்பவரே, தீ காயங்களால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பில் ஆதிராவின் தாயார் அம்பிளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ஆதிராவுடன் வசித்து வந்த ஷானவாஸ் என்பவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் வீடியோ பதிவேற்றம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் ஆதிரா. இவருடன் இணைந்தும் தனியாகவும் ஷானவாஸ் வீடியோ பதிவேற்றி வந்துள்ளார்.
இதில் ஆதிரா பதிவேற்றிய வீடியோவுக்கு பொதுமக்களில் ஒருவர் அளித்த கருத்து, இந்த தம்பதிகளில் வாக்குவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ஷானவாஸ் ஆதிரா மீது பெட்ரோல் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார்.
மட்டுமின்றி, அவரும் தீ கொளுத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இருவரையும் மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ஆதிரா மரணமடைந்துள்ளார். ஆபத்து கட்டத்தை தாண்டிய நிலையில் ஷானவாஸ், பொது அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆதிரா தாயாரிடம் தெரிவித்திருந்த தகவலை அவர் வாக்குமூலமாக பொலிசாரிடம் தெரிவிக்க, தற்போது ஷானவாஸ் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதிராவும் ஷானவாசும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 3 மாதமேயான ஒரு குழந்தை உள்ளது.
ஆதிரா ஏற்கனவே திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளுக்கு தாயார் எனவும், ஷானவாசுக்கும் முதல் திருமணத்தில் இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.