2021ஆம் ஆண்டிற்கான ஜி7 உச்சி மாநாடு, கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்தின் கோர்ன்வோல் நகரில் ஆரம்பமாகியது.
இதில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளின் கட்டமைப்பை மேம்படுத்தவும், பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவவும் ஒரு திட்டத்தை உருவாக்க ஜி7 நாட்டுத் தலைவர்கள் முடிவெடுத்துள்ளனர்.
உலகில் உள்ள வறிய மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளின் உட்கட்டமைப்பு நிர்மாணங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் திட்டத்திற்கு செல்வந்த நாடுகளின் கூட்டமைப்பான ஜி7 நாடுகளின் தலைவர்கள் இதன்போது தமது இணக்கத்தை வெளியிட்டுள்ளனர்.
இவ்வாறான உட்கட்டமைப்பு நிர்மாணங்களை மேற்கொள்வதன் ஊடாக, வறிய மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளில் சீனா அதிகரித்து வரும் தமது ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில், ஜி 7 நாடுகளின் மாநாட்டில் இந்த புதிய திட்டம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாநாட்டின் 2ஆம் நாளில் வறிய மற்றும் மத்திய வருமானம் பெறும் நாடுகளில் சீனா மேற்கொள்ளும் திட்டங்களுக்கு மாற்றீடாக தரமிக்க திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார்.