இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட கணவரின் வீட்டுக்குள் நுழைந்து அவரை அடித்து உதைத்து குழந்தைகளை அழைத்து சென்ற மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையை சேர்ந்தவர் அஷ்ரப் அன்சாரி. இவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அன்சாரியின் பெற்றோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அன்சாரி வீட்டுக்கு சமீபத்தில் அவரின் மனைவி 6 பேரை அழைத்து கொண்டு வந்தார். பின்னர் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று அன்சாரி படுக்கையறைக்குள் நுழைந்தார்.
இதன்பிறகு நடந்தது தான் கொடூரம்! தனது கணவர் ஒரு கொரோனா நோயாளி என்பதை கூட நினைக்காமல் அவரை மனைவி சரமாரியாக தாக்கினார்.
இதில் அன்சாரியின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. கொரோனா தொற்றின் வீரியத்தை உணராமல் அன்சாரி மனைவி அப்படி நடந்து கொண்டது அக்கம்பக்கத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதை தொடர்ந்து தனது இரண்டு குழந்தைகளை அங்கிருந்து அவர் அழைத்து சென்றிருக்கிறார். பெருந்தொற்று பீதி காரணமாக யாரும் அங்கு உதவிக்கு வராத நிலையில் நபர் ஒருவர் நடந்ததை எல்லாம் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்துள்ளார்.
தற்போது அன்சாரி காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் கூறுகையில், என் மனைவி மீது நான் கொடுத்த புகாரை பொலிசார் முதலில் எடுத்து கொள்ளவில்லை.
சில நாட்களுக்கு பின்னர் புகாரை எடுத்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை சமர்பித்த போதிலும் கடத்தல் பிரிவுகளை எஃப்.ஐ.ஆரில் சேர்க்கவில்லை.
இப்போது என் குழந்தைகள் எங்கிருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.