பிரித்தானியாவில் வீடு ஒன்றிற்குள் தாயும் மகளும் இறந்துகிடந்த நிலையில், சுவரில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகள் வழக்கை திசை திருப்பும் வகையில் அமைந்திருந்தன.
பிரித்தானிய அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிவந்தவர் Dr சமன் மீர் சச்சார்வி (49). தினமும் அவர் பாகிஸ்தானில் வாழும் தனது தாயிடம் தொலைபேசியில் பேசும் நிலையில், ஒரு நாள் மகளிடமிருந்து தொலைபேசி அழைப்பு வராததால் அந்த தாய் பிரித்தானியாவில் வாழும் நண்பர் ஒருவரை அழைத்து விவரம் கேட்டிருக்கிறார்.
அந்த நபர் கொடுத்த தகவலின்பேரில் பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றிருக்கிறார்கள். வீட்டிற்குள் சச்சார்வியும் அவரது மகள் வியன் மாங்ரியோவும் (14) பாதி எரிந்த நிலையில் சடலங்களாக கிடப்பதை பொலிசார் கண்டுள்ளனர்.
அப்போது, வீட்டிற்குள், சுவரில், ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்ற வார்த்தைகள் எழுதப்பட்டிருப்பதைக் கண்டுள்ளனர் பொலிசார். ஆக, தாய்க்கும் மகளுக்கும் பிரச்சினை, மகளைக் கொன்றுவிட்டு, தாய் தற்கொலை செய்துகொண்டது போன்ற ஒரு தோற்றம் அங்கு காணப்பட்டது.
ஆனால், உடற்கூறு ஆய்வில் திடுக்கிடவைக்கும் தகவல்கள் வெளியாகின. சச்சார்வி கழுத்து நெறிக்கப்பட்டு உயிரிழந்திருந்ததும் அவரது மகள் வியன் தலையணையால் அழுத்தப்பட்டு இறந்திருந்ததும் தெரியவந்தது. எனவே, இந்த சம்பவத்தில் வேறு யாரோ சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என முடிவு செய்த பொலிசார் வீட்டை ஆராய்ந்தபோது, அங்கு இரு மதுபான போத்தல்களும் ஐஸ்கிரீம் போத்தல்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அந்த பொருட்களை Shahbaz Khan (51) என்பவர் வாங்கியது தெரியவந்தது. கட்டிட வேலை செய்யும் Khan, மருத்துவர் சச்சார்வி வீட்டில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்திருக்கிறார்.
செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி அவர் சச்சார்வி வீட்டுக்கு வந்திருக்கிறார். அக்டோபர் 1ஆம் திகதி சச்சார்வியும் அவரது மகளும் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்கள்.
ஆனால், தான் சச்சார்வியைப் பார்த்து சில நாட்கள் ஆகிவிட்டன என்று ஒருவரிடமும், அந்த வீட்டுக்குப் போய் பல நாட்கள் ஆகிவிட்டன என்று மற்றொருவரிடமும் கூறியிருக்கிறார் Khan.
பொலிசாரின் கவனம் அவர் மீது திரும்ப, அவரது வீட்டை சோதனையிடும்போது, அங்கு சச்சார்விக்கு சொந்தமாக நகைகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் பணமும் மறைத்துவைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே, சச்சார்வியையும் அவரது மகளையும் கொன்றுவிட்டு, பழியை அவரது மகள் மேலேயே போட திட்டமிட்ட Khan, வீட்டுக்குள் ’இது கொரோனா வீடு, என் தாய் கொடியவள், எனக்கு உதவி செய்யுங்கள்’ என்று எழுதிவைத்திருக்கிறார்.
கைது செய்யப்பட்ட Khan மற்றும், சம்பவம் நடந்தபோது தன் கணவர் தன்னுடன்தான் இருந்தார் என பொய்சாட்சி சொல்லிய அவரது மனைவி Rabia Shahbaz (45) ஆகியோர் வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள்.