ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையே எரிபொருள் விலைகளை அதிகரித்ததாக ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் தீர்மானத்திற்கு அமைய நிதியமைச்சராக பிரதமர் மகிந்த ராஜபக்ச எரிபொருள் விலையை அதிகரித்தார் எனவும் அவர் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு சம்பந்தமாக அமைச்சர்கள் என்ற வகையில் அனைவரும் விரும்பவில்லை என்ற போதிலும் நாடு என்ற வகையில் காணப்படும் டொலர் பற்றாக்குறையை ஈடு செய்ய விரும்பமின்றியேனும் எரிபொருளின் விலைகளை அதிகரிக்க நேரிட்டது.
எரிபொருள் விலை அதிகரிப்பானது அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட கூட்டு தீர்மானம் என்பதால், அந்த தீர்மானத்திற்கு அனைவரும் கட்டுப்பட்டுள்ளனர்.
இதனால், எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில மீது மாத்திரம் குற்றம் சுமத்துவது தவறு. அப்படியானால், நாட்டில் ஏற்பட்டுள்ள உரம் தொடர்பான பாரிய பிரச்சினைக்கு, அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்த ஜனாதிபதியும், அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவும் பொறுப்புக் கூற வேண்டும்.
அப்படி பார்த்தால் அமைச்சர்கள் அனைவரும் பதவியை துறந்து விட்டு வீட்டுக்கு செல்ல நேரிடும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
குருணாகலில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ராஜாங்க அமைச்சர் இதனை கூறியுள்ளார்.