பிரித்தானியாவில் பிரபல கடற்கரையில் பெண் ஒருவர், நூற்றுக்கனக்கான சுற்றுலாவாசிகள் முன்னிலையில், 150 அடி உயர குன்றிலிருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் மிகவும் பிரபலமான சுற்றுலா தளமான டர்டில் டோர் அமைந்துள்ள, டோர்செட் பகுதியில் Man o’ War கடற்கரைக்கு அருகில் உள்ள செங்குத்தான மலைக் குன்றிலிருந்து அப்பெண் கீழே விழுந்துள்ளார்.
இச்சம்பவம் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் நடந்துள்ளது.
அருகில் இருந்த சுற்றுலா வாசிகள் பலரும் எச்சரித்த போதிலும், அப்பெண் குன்றின் கீழ் கடற்கரையில் இருக்கும் ஒருவரை பார்த்து “நான் வருகிறேன்” என கத்திக்கொண்டே, செங்குத்தான பாறை வழியாக இறங்கியுள்ளார்.
அப்போது அவர் 150 அடி கீழே பாறையின் மீது விழுந்துள்ளார். உடனடியாக அவசர சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு பொலிஸார் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் வந்தனர். ஆனால், அப்பெண் விழுந்த சில நொடிகளில் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.