கடந்த ஆண்டு இடம்பெற்ற MT New Diamond கப்பல் சம்பந்தப்பட்ட கடல் தீவிபத்தை தொடர்ந்து, ஆமைகளின் இறப்பு எண்ணிக்கை வழக்கமான ஆண்டு சராசரியை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புத் துறையின் அத்திட்டிய வனவிலங்கு மறுவாழ்வு மையம் இதனை தெரிவித்துள்ளது.
“ஒரு வழக்கமான ஆண்டில், குழந்தை ஆமைகளின் இறப்புகளைத் தவிர்த்து, ஆண்டு முழுவதும் சுமார் ஐந்து ஆமை இறப்புகளை மட்டுமே பதிவு செய்கிறோம்.
2020ம் ஆண்டில், MT New Diamond கப்பல் தீ விபத்துக்கு முன்னர் மூன்று இறப்புகளை மட்டுமே பதிவு செய்துள்ளோம். தீ விபத்தைத் தொடர்ந்து, 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த ஆண்டு, இதுவரை, 25க்கும் மேற்பட்ட ஆமை இறப்புகள் நாடு முழுவதும் இருந்து பதிவாகியுள்ளன, ”என்று வனவிலங்கு பாதுகாப்புத் துறையுடன் இணைக்கப்பட்ட கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுஹதா ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,
கரையொதுங்கிய பல விலங்குகளின் உடல்களில் நெக்ரோப்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், MV X-Press Pearl கப்பல் பேரழிவுக்கு நேரடி தொடர்பு உள்ளதா என்பதைத் தீர்மானிப்பதற்காக மாதிரிகள் அரசு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகள் மேற்கு கடற்கரையில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் மிகவும் பொதுவான வகை என்றாலும், தற்போது மற்ற உயிரினங்களும் கரையில் இறந்து கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேற்கு கடற்கரையில் ஆமைகளுக்கு கூடு கட்டும் காலம் இந்த ஆண்டின் இறுதியில் உள்ளது.
MV X-Press Pearl கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தொலைவில் கடந்த மே 20ம் திகதி அன்று தீப்பிடித்தது, பின்னர் மே 24ம் திகதி ஏற்பட்ட வெடிப்பில் தீ பரவியது.
இதன்போது பல கொள்கலன்கள் கடலில் விழுந்தன, இதனால் கடல் நீரில் பிளாஸ்டிக் துகள்கள் உட்பட பல கழிவு பொருட்கள் கலந்தன.
அப்போதிருந்து, நாட்டின் மேற்கு கடற்கரையில் குப்பைகள் மற்றும் இறந்த கடல்வாழ் உயிரினங்கள் அடித்துவரப்பட்டு, மீன்வளத் துறையையும் நாட்டின் கடல் சூழலையும் கடுமையாக சேதப்படுத்தின.
இதேவேளை, கடந்த ஆண்டு,MT New Diamond என்ற பெரிய எண்ணெய் கப்பலும் இலங்கையின் கிழக்கு கடற்கரையில் தீப்பிடித்து எரிந்தமை குறிப்பிடத்தக்கது.