பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் வீட்டின் பெறுமதி சுமார் 30 கோடி ரூபாய் என மகரகம நகரசபையின் உறுப்பினர் தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இதனை கூறியுள்ளார்.
எனினும் இந்த வீடு ரோஹித்த ராஜபக்சவின் பெயரில் இருக்கின்றதா அல்லது அவருக்கு சொந்தமானதா என்பது தனக்கு தெரியாது எனவும் அவர் அந்த வீட்டில் வசித்து வருகிறார் என்பதை மாத்திரம் கூற முடியும் எனவும் ராமநாயக்க கூறியுள்ளார்.
அத்துடன் ரோஹித்த ராஜபக்ச வசித்து வரும் இந்த வீட்டில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு சிலர் கூடி பிறந்த நாளை கொண்டாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமாக ரோஹித்த ராஜபக்சவை தொடர்பு கொண்டு விசாரிக்க முயற்சித்த போதிலும் அவர் இதுவரை அதற்கு பதிலளிக்கவில்லை என சிங்கள இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச, அந்த வீட்டில் தனது சகோதரர், வாடகைக்கு வசித்து வருவதாக கூறியுள்ளார்.
அத்துடன் அந்த வீட்டில் பிறந்த தின கொண்டாட்டமோ, வேறு விருந்துகளுக்காகவோ எவரும் ஒன்றுக்கூடவில்லை எனவும் நாமல் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.