பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 11,007 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் டெல்டா வைரஸின் தாக்கம் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கண்டறியப்பட்ட இந்த பயங்கரமான வைரஸால், பிரித்தானியாவின் பல பகுதிகளில் தொற்று எண்ணிக்கை படுவேகமாக உயர்ந்துள்ளது. இதனால் பிரித்தானியா, நான்கு மாதங்களுக்கு முன்பு இருந்த நிலைமைக்கு திரும்பியுள்ளது.
‘மிகவும் பரவக்கூடிய’ டெல்டா வைரஸின் தாக்கத்தால் பிரித்தானியாவில் நேற்று ஒரே நாளில் 11,007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிப்ரவரி மாதத்துக்குப் பிறகு பாதிப்பு எண்ணிக்கை 10,000-த்தை கடந்தது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த நான்கு மாதங்களில் பதிவான தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் இது புதிய உச்சம் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, பிரித்தானிய அரசு நான்காவது படிநிலையாக ஜூன் 21-ஆம் திகதி தளர்த்தப்படவிருந்த கட்டுப்பாடுகளை தாமதப்படுத்தி, ஜூலை 19-ஆம் திகதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இந்த 4 வாரங்களுக்குள் மேலும் மில்லியன் கணக்கான மக்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
டெல்டாவின் தாக்கத்தால் தொற்று எண்ணிக்கை அதிகரித்தாலும், இறப்பு எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வியாழக்கிழமையன்று 19 பேர் இறந்துள்ளனர்.
பிரித்தானியாவில் இதுவரை 127,945 பேர் கொரோனா பாதிப்பால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.