இலங்கை முழுவதும் பயணக் கட்டுப்பாடு பிறப்பிக்கப்பட்டுள்ள போதிலும் மக்களின் செயற்பாடுகள் திருப்திகரமாக அமையவில்லை என்று சுகாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படுமாக இருந்தால் நாடு இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படும் என்று அவர்கள் அரசுக்கு அறிவித்துள்ளனர்.
இதனால் இப்போதுள்ள நிலையில் பயணத் தடையை மேலும் இருவார காலம் நீடிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என்றும் சுகாதார நிபுணர்கள் அரசிடம் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதியுடன் தளர்த்த அரசு ஆராய்ந்து வருகின்ற நிலையில், கோவிட் செயலணிக் கூட்டங்களிலும் அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 24ஆம் திகதி பொஷன் பண்டிகை என்றபடியால் மக்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் 21ஆம் திகதி பயணக் கட்டுப்பாட்டை நீடிக்க வேண்டாம் என்று அரசிடம் சுகாதார நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்போது நாட்டைத் திறக்கும் தீர்மானத்தை அரசு கைவிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
“பயணக் கட்டுப்பாட்டு காலத்தில் மக்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக அமையவில்லை. நாட்டில் நாளாந்த கோவிட் மரணங்களும், தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் இன்னமும் குறையவில்லை. ஆகவே, இவ்வாறான நிலையில் நாட்டை உடனடியாக திறப்பது ஆபத்தானது” என்று விசேட வைத்திய நிபுணர்கள், அரசிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
“இப்போது அரசு நாட்டைத் திறக்குமானால் அதற்கு எமது ஆதரவை வழங்க முடியாது. மக்களின் நிலைமைகளைக் கருத்தில்கொண்டு நாட்டை இன்னும் இரண்டு வார காலத்துக்கு முடக்குவதே அரசுக்கு இருக்கும் ஒரே தெரிவாகும்” என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
“நாட்டைப் பாதி திறந்தும் பாதி மூடியும் கோவிட் வைரஸ் பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது? ஆகவே, அரசு இன்னும் சற்றுப் பொறுமையாக இருந்து சுகாதாரத் தரப்பினரின் கோரிக்கைகளுக்கு செவிமடுக்க வேண்டும்” எனவும் வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.