இந்த அரசாங்கத்தினால் நாட்டின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப முடியாது என தாங்கள் அன்றே எதிர்வு கூறியதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு ,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இன்றைய நிலைமையை பொறுப்பேற்று அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் தமிழ் அரசியல்வாதிகளும் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மூன்றில் இரண்டு பங்கு கரையோர பிரதேசத்தை வைத்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் நலன் கருதி இதுவரை எரிபொருள் விலை அதிகரித்ததைப் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை.
அன்றாடம் மீன்பிடிக்க சென்று சிறிதளவு மீனை பிடித்து விற்பனை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி இவர்கள் ஏன் சிந்திக்கவில்லையெனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
தற்பொழுது நாட்டில் விலைவாசிகள் அதிகரித்ததனூடாக கோவிட் தொற்றினால் மிகவும் சிரமத்திற்குள் வாழும் மக்கள் மத்தியில் மேலும் பல கஷ்டங்களை இந்த அரசாங்கத்தின் சில செயற்பாடுகள் காரணமாக மக்கள் அனுபவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றார்கள். பேக்கரி பொருட்களுக்கான விலைகள் இந்த வாரத்திலிருந்து ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவிருக்கின்றன.
எரிபொளுளை நம்பியிருக்கும் அனைத்து துறைகளும் 15 ரூபாவினால் விலை அதிகரிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரிமா நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலையானது மூன்று ரூபா ஐம்பது சதத்தினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
கடந்த சில மாதங்களுக்குள் அரிசியின் விலையானது 27 ரூபா தொடக்கம் 46 ரூபா வரை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. தேங்காய் எண்ணெயின் விலையானது 30 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. பருப்பின் விலை 36 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
இதன் காரணமாக மக்கள் பல சிரமத்திற்குள் வாழும் பொழுது இலங்கை அரசாங்கத்தினால் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. 92 ஒக்டெயின் 20 ரூபாவாலும், 95 ஒக்டெயின் 23 ரூபாவாலும் ,டீசல் 7 ரூபாவாலும் ,சுப்பர்டீசல் 12 ரூபாவாலும் ,மண்ணெண்ணெய் 7 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நாட்டிலே விஷேடமாக வடகிழக்கிலே வாழும் மக்கள் மத்தியிலே இலங்கையின் நிலப்பரப்பில் கரையோரப் பிரதேசங்களில் மூன்றில் இரண்டு பங்கானது தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களாகும். மீன்பிடிக்கான கபினட் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஒரு தமிழர் ஆவார்.
மூன்றில் இரண்டு பங்கு கரையோர பிரதேசத்தை வைத்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மக்களின் நலன் கருதி இதுவரை எரிபொருள் விலை அதிகரித்ததைப் பற்றி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எந்தக் கருத்தினையும் வெளியிடவில்லை. அன்றாடம் மீன்பிடிக்க சென்று சிறிதளவு மீனை பிடித்து விற்பனை செய்து வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி இவர்கள் ஏன் சிந்திக்கவில்லை.
இன்று விவசாயிகளுக்கு பசளையில்லை. யூரியா பையொன்று 5000 ரூபாவாக காணப்படுகின்றது. விவசாயத்தை நம்பி வாழும் மக்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமல்ல ,கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களின் வாக்குகளை சேகரித்து அரசாங்கத்திற்கு வழங்க வேண்டும் என்பதற்காக இவ்வாறான விலைவாசிகளை நாங்கள் குறைப்போம், மீனவக் குடும்பங்களுக்கும் விவசாயிகளுக்கும் நல்லதொரு எதிர்காலத்தை அமைப்போம் எனக்கூறி செயற்பட்ட அனைவரும் இதற்கு பொறுப்புக் கூறவேண்டும்.
அவர்களெல்லாம் பதவி விலக வேண்டும் இல்லாவிட்டால் அரசாங்கத்தின் இந்த மோசமான செயற்பாடுகளுக்கு எதிராக தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். இந்த நாட்டின் பொருளாதாரத்தை இந்த அரசாங்கத்தினால் கட்டியெழுப்ப முடியாது என்பதை நாங்கள் அன்றே சொன்னோம்.
மனித உரிமைகளை மதிக்காது, கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுத் தராது இந்த அரசாங்கமானது தனித்து செயற்பட முடியாது. அண்மையில் ஐரோப்பிய பாராளுமன்றத்தினால் எடுக்கப்பட்ட விஷேட தீர்மானத்தினூடாக அது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழர்களுடைய பிரச்சினைக்கு ஒரு தீர்வை வழங்காமல் அனைத்து நாடுகளையும் பகைத்துக்கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காமல் முன்செல்ல முடியாது.
அந்த தீர்வினை வழங்க விரும்பிய கட்சிக்கு வாக்களியுங்கள் என்று நாங்கள் கேட்டிருந்தோம்.ஆனால் நாங்கள் விலைவாசிகளை குறைப்போம்,மக்களின் பொருளாதாரத்தினை கட்டியெழுப்புவோமென்று பொய்யான வாக்குறுதிகளை வழங்கி அரசாங்கத்திற்கு வாக்குசேகரித்த ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் அவர்களுக்கு வாக்கு சேகரித்த ஒவ்வொரு பிரதிநிதியும் இதற்கு உடனடியாக தங்களது கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்.
இந்த அரசாங்கத்தினைப் பொருத்தவரையில் அன்றாடம் உழைத்துவாழ்க்கை நடாத்தும் மக்கள் தொடர்பில் சிந்திக்காத அரசாங்கமாகவே இருக்கின்றது.இன்றைய பயணத்தடையின் போது சொந்த வாகனங்கள் வைத்திருப்பவர்கள் பயணிக்கும் நிலை காணப்படுகின்றது.ஆனால் பொதுப்போக்குவரத்தினை பயன்படுத்துபவர் மட்டுமே எந்தவித போக்குவரத்தினையும் செய்யமுடியாத நிலையுள்ளது.
கோடிக்கணக்காக உழைக்கும் கம்பனிகளுக்கு விசேட பாஸ்கள் வழங்கப்பட்டு அவர்கள் உழைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் சிறிய தொழில் முயற்சியாளர்களுக்கு அந்த வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
இந்த அரசாங்கமானது பெரியபெரிய கம்பனிகளுக்கான அரசாங்கமாகவே செயற்படுகின்றது.ஊழலில் மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ள அரசாங்கமாகவே இந்த அரசாங்கம் இருக்கின்றது.இவ்வாறான ஒரு கஸ்ட நிலையிலேயே இந்த நாட்டில் தமிழ் மக்களும் வாழ்கின்றனர்.
தமிழ் மக்களுக்கான அபிவிருத்தி என்பது தங்களது ஆதரவாளர்களுக்கு மண் அனுமதிப்பத்திரம் வழங்குவதும் இரண்டு மூன்று பாதைகளை புனரமைத்துவிட்டு அதனை வைத்து பூச்சாண்டி காட்டுவதல்ல.மக்களின் அன்றாட நிலைமைகள் குறித்தும் அரசாங்கத்துடன் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.