தற்போது இலங்கையில் பரவிவரும் திரிபடைந்த டெல்டா வைரஸின் தன்மைகளின் அடிப்படையாக கொண்டு நோக்கும்போது தொற்றுப் பரவல் மிக வேகமாக அதிகரிக்கும் என்று சுகாதாரக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் வைத்திய நிபுணர் ரவி ரன்னன் எலிய தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய உண்மை நிலவரம் என்பது மிகவும் சிக்கலானதாகும். தொற்றினால் இடம்பெற்ற மரணங்கள் அதிகமெனினும், உண்மையில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை பதிவுடன் ஒப்பிடுகையில், மரணங்களின் பதிவானது ஓரளவிற்குப் பக்கச்சார்புடனேயே முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கையில் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் எண்ணிக்கை குறைவான உள்ளமையே இதற்குக் காரணமாகும்.
இவ்விடயத்தை பொறுத்தவரையில் அண்மைக்காலத்தில் நாம் பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.
குறிப்பாக தொற்றினால் ஏற்பட்ட மரணங்களை அறிக்கையிடுவதில் சில தினங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்ட மாற்று முறையின் விளைவாக, இனி அன்றாடம் வெளியிடப்படும் மரணங்களின் எண்ணிக்கையானது கடந்த காலங்களில் இடம்பெற்ற மரணங்களை உள்ளடக்கியிருக்காது.
அதேவேளை மிகமுக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், கோவிட் வைரஸ் தொற்றுப்பரவலுடன் தொடர்புடைய அனைத்து அளவீடுகளிலும் சிக்கல்கள் உள்ளன.
கடந்தகால நிலவரம் மற்றும் தற்போதைய போக்கு ஆகியவை தொடர்பில் மாறுபாடான அல்லது பக்கச்சார்பான தகவல்கள் காணப்படலாம்.
உதாரணத்திற்கு உண்மையில் கோவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையும், தொற்றுக்குள்ளானதாகப் பதிவான எண்ணிக்கையும் சுமார் 100 மடங்குவரை வேறுபடலாம்.
தொற்றாளர்களை இனங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் தொடர்பில் இலங்கையினால் பின்பற்றப்படும் கொள்கை மிகமுக்கியமான பிரச்சினையாகும்.
இதனால் இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த இருமாதகாலத்தில் பல்வேறு மாறுபாடுகளைக் காண்பித்திருப்பதுடன், இது தொற்றுப்பரவல் நிலவரம் குறித்த தவறான மதிப்பீடுகளுக்கும் வழிவகுக்கும்.
கோவிட் வைரஸ் தொற்றாளர்களை இனங்காண்பதற்கான பரிசோதனைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் வீழ்ச்சியானது, தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையிலும் தாக்கங்களை ஏற்படுத்தும்.
குறைந்தளவில் பி.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுத்த நாடுகளில் ஒப்பீட்டளவில் குறைந்தளவான மரணங்களே பதிவாகியுள்ளமை இதற்குச் சிறந்த உதாரணமாகும்.
எனவே இலங்கையில் கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட பல மரணங்கள் உண்மையில் இனங்காணப்படவில்லை என்பதை உறுதியாக கூற முடியும்.
எனவே இவ்வாறான நடைமுறைச்சிக்கல்களைக் கருத்திற்கொண்டு நோக்கும்போது, அன்றாடம் நாட்டில் பதிவாகும் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை என்பது தற்போதைய உண்மை நிலவரத்தின் பிரதிபலிப்பு அல்ல.
அதேபோன்று நாளாந்தம் பதிவாகும் கோவிட் வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கையில், மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவே இதுவிடயத்தில் என்ன நடக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதற்கு பரிசோதனைகளின் எண்ணிக்கை, அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை, பதிவாகும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை ஆகிய நான்கு காரணிகளையும் ஒப்பீடுசெய்து பார்ப்பது அவசியமாகும்.
இந்த நிலையில் தற்போது பரவிவரும் திரிபடைந்த டெல்டா வைரஸின் தன்மைகளின் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, நாட்டில் இப்போது பின்பற்றப்பட்டுவரும் நடைமுறைகளின்கீழ் தொற்றுப்பரவல் வீதமானது விரைவில் மிகவேகமாக அதிகரிக்கும் என்பது எனது கணிப்பாகும் என குறிப்பிட்டுள்ளார்.