நடிகர் விஜய் பிறந்தநாளையொட்டி அவருக்கு வித்தியாசமான பரிசு ஒன்றை வழங்க அவரது அப்பா சந்திரசேகர் திட்டமிட்டுள்ளார்.
இன்று நடிகர் விஜய் தனது 47 வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
அதனையொட்டி, அவரது அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் உருக்கமாக ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
அந்த வீடியோவில், “இந்த பிறந்தநாள் என்னை பொறுத்தவரை ரொம்ப ஸ்பெஷலான பிறந்தநாள் என்றே நினைக்கிறேன்.
விஜய் வயது 47. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வருடமும் 47. அதனால், இதுவொரு பெருமையான சந்தோஷப்படக்கூடிய பிறந்தநாள்.
பொதுவாவே விஜய்யும் நானும் பெரிதாக பிறந்தநாளை கொண்டாடியது இல்லை. ஆயிரக்கணக்கான மக்களை சந்தோஷப்படுத்துவதுதான் உண்மையான பிறந்தநாள்.
ஏழைகளுக்கு கல்விக்கான உதவி, ரத்ததானம், அன்னதானம் போன்ற நல்ல காரியம் செய்யும்போதெல்லாம் பிறந்தநாளாக நினைத்துக்கொள்வேன்.
என் வாழ்க்கை அப்படித்தான். இனியும் அப்படித்தான். விஜய்யின் இந்தப் பிறந்தநாளில் ஒரு முக்கியமான ஒரு அறிவிப்பை கொடுக்கவேண்டும் என்று ஆசைப்படுறேன். ஒரு விஷயம் ரொம்ப நாளா என் மண்டைக்குள்ள ஓடிட்டு இருக்கு.
குறிப்பா, இந்திய மக்கள் பாதுகாப்பா இருக்காங்களா? தமிழ் மக்களுக்கு பாதுகாப்பு இருக்கா? ஒரு தாய் தனியா இருக்க முடியுதா? ஒரு குழந்தை தனியா விளையாடிட்டு வீட்டுக்கு வர முடியுதா? என்பது குறித்தெல்லாம் ரொம்ப காலமாக நினைத்துக்கொண்டிருந்தேன்.
ஒவ்வொரு தமிழனுக்கும் பாதுகாப்பு கிடைக்கவேண்டும். அதுக்கு எல்லோர் வீட்டிலும் சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் கொஞ்சம் குறையும்.
யாராவது திருடன் வந்துடுவானோ என்ற பயத்துடனேயே வாழ்கிறார்கள் மக்கள். அதுவே, சிசிடிவி இருந்தால் திருட வருபவர்களுக்கு ஒரு பயம் இருக்கும்.
ஆனால், ஏழை மக்களுக்கு சிசிடிவி வாங்கும் வசதி இல்லை. அதனால், ஒரு மாவட்டத்திற்கு வீதம் 10 ஆயிரம் வீடுகளுக்கு குறைந்தது 10 ஆயிரம் சிசிடிவி கேமரா கொடுக்க நினைக்கிறேன்.
சிசிடிவி ஒரு கண் மாதிரி. எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும். எந்த தவறையும் கண்டுபிடித்துவிடலாம்.
அதனால், நான்கு மாவட்டங்களில் எனது துபாய் நண்பர்களுடன் இணைந்து சிசிடிவி கேமரா கொடுக்கவிருக்கிறேன். முதற்கட்டமாக வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சென்னையில் சிசிடிவி கேமரா சமூக உணர்வோடு கொடுக்கவிருக்கிறோம்.
அதற்கடுத்ததாக, மதுரை, கோவை என்று விரிவுப்படுத்த ஆசைப்படுகிறேன். இப்படியொரு பெரிய பரிசை உன் பிறந்தநாளுக்கு கொடுக்கிறேன். இதைவிட எனக்கு வேற எந்த சந்தோஷமும் கிடையாது” என்று எஸ்.ஏ சந்திரசேகர் வீடியோவில் பேசியுள்ளார்.