சமையல் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அனுமதிக்காத நிலையில் மோசடியான வகையில் விலை அதிகரிப்பை மேற்கொண்டு நுகர்வோரை எரிவாயு நிறுவனங்கள் ஏமாற்றியுள்ளன என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. குற்றஞ்சாட்டினார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (22) நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு குற்றம்சாட்டிய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“புதிய சமையல் எரிவாயு சிலிண்டரை அறிமுகப்படுத்துவதாக கூறி, 12.5 கிலோவாக இருந்த சிலிண்டரின் நிறையை 9.8 கிலோவாகக் குறைத்து சிலிண்டரின் விலை 100 ரூபாவினால் குறைக்கப்பட்டிருந்தது.
ஆனால், இருந்த விலையை விடவும் புதிய சிலிண்டரில் கிலோ ஒன்றின் விலை 32 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இதன்மூலம் நுகர்வோர் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் அதிகார சபை விலையை அதிகரிப்புக்கு இடமளிக்காத போதும், மோசடியான வகையில் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். நுகர்வோர் அதிகார சபை இந்த விடயம் தொடர்பில் வழக்குப் போட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
ஆனால், இது அமைச்சின் கீழ் உள்ள விடயமாக இருக்கும்போது ஏன் நீதிமன்றத்துக்குப் போக வேண்டும்? ஊழலை மறைப்பதற்காகவே வழக்கு விடயத்தை இவர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
சந்தையில் 12.5 சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. இதனால் புதிய சிலிண்டரைக் கொள்வனவு செய்யும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், புதிய எரிவாயு சிலிண்டருக்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியதா? புதிய வகை எரிவாயுவை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் உண்மையாவையா?
அது உண்மையென்றால் இப்போது இருக்கும் எரிவாயு செயல் தன்மை குறைந்ததா? பாதுகாப்பற்றதா? சர்வதேச தரத்தில் இல்லையா? என்பதனைக் கூற வேண்டும்.
நாடு பூராகவும் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகின்றது எனக் கூறப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் அரசின் நடவடிக்கை என்ன?” – என்று கேள்வி எழுப்பினார்.