“கடந்த அரசில் 88 ஆயிரத்து 615 மெட்ரிக் தொன் நெல் விலங்கு உணவாக குறைந்த விலையில் விற்கப்பட்டதால் 2.48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது. இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.”
இவ்வாறு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வாய்மூல விடைக்கான வினாவின்போது அரச தரப்பு எம்.பி. கே.பி. குமாரசிறி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த அரசில் நல்ல நிலையில் இருந்த நெல் விலங்குகளின் தீவனமாகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது.
நெல் ஒரு கிலோவுக்கு 24 ரூபா குறைத்தே விற்கப்பட்டது நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஒப்புதல் இல்லாமல் 88 ஆயிரத்து 615 மெட்ரிக் தொன் நெல் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதால் 2.48 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டது.
இதற்கு அப்போதைய அமைச்சர் உள்ளிட்ட அரசுதான் பொறுப்பு. இது தொடர்பாக சி.ஐ.டியும் விசாரித்து வருகின்றது” – என்றார்.