இந்தியாவில் புதிய டெல்டா-பிளஸ் (Delta-Plus) கொரோனா வைரஸ் வகை பற்றிய கவலை அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கண்டறியப்பட்ட B .1.617.2 வைரசுக்கு டெல்டா என்று உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது. இந்த டெல்டா வைரஸ் தற்போது டெல்டா பிளஸ் வைரஸாக உருமாறியுள்ளது.
இந்த வகை வைரஸ், தடுப்பூசியின் வீரியத்தை குறைக்கக் கூடியது என்று அண்மையில் மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர். டெல்டா வகை வைரஸ்க்கு எதிராக, கொரோனா தடுப்பூசிகள் பெரியளவில் பலனளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கேரளா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 24 பேருக்கு அந்தப் டெல்டா பிளஸ் வகைக் கிருமித்தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் உள்ளவர்களுக்கு அதிக அளவில் கிருமித்தொற்றுப் பரிசோதனை நடத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
தற்போது கவலையளிக்கக் கூடிய வகையாக மாறியுள்ள (Variant of Concern) டெல்டா பிளஸ் வைரஸில் பின்வரும் பண்புகள் இருப்பதாக INSACOG தெரிவித்துள்ளது:
1. வேகமாக பரவும் தன்மை (Increased transmissibility)
2. நுரையீரல் உயிரணுக்களில் வலுவாக பிணையக்கூடியது (Stronger binding to receptors of lung cells)
3. மோனோக்ளோனல் ஆன்டிபாடியை குறைக்கும் (Potential reduction in monoclonal antibody response)
இதற்கிடையே, இந்தியாவில் புதிதாகக் கிருமித்தொற்று அடையாளம் காணப்படுவோர் எண்ணிக்கை 3 மாதங்களில் இல்லாத அளவு குறைந்துள்ளது. நேற்று புதிதாக 42,640 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் 1,167 பேர் அதிகமானோர் மாண்டனர்.