கோவிட் – 19 தொற்றுநோயின் மூன்றாவது அலை பரவுவதைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களை மீறுபவர்களுக்கான அபராத தொகையை 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது குறித்து ஆராயப்படுகின்றது.
தற்போது ஐந்தாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படும் நிலையில், அந்த தொகையை 50 ஆயிரம் ரூபாவாக உயர்த்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு முழுவதும் விதிக்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் தொடர்ந்து மீறி வருவதால், இந்த நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சு தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தற்போது அமுலில் உள்ள சுகாதார விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளதுடன், இதன் மூலம் வைரஸின் மூன்றாவது அலை பரவுவதை திறம்பட கட்டுப்படுத்த முடியும் என்று அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
நோய் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த தற்போது நடைமுறையில் உள்ள சுகாதார விதிமுறைகள் காவல் துறையுடன் இணைந்து தனது அமைச்சினால் கண்டிப்பாக செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.