சுவிஸ் பல்கலைக்கழகம் ஒன்று, தங்கள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்க சுவிஸ் மக்களை கோரியிருந்தது. இந்த விடயம் உலகம் முழுக்க தலைப்புச் செய்தியாகியது.
சூரிச் பல்கலைக்கழகமும், Agroscope ஆராய்ச்சி நிறுவனமும் கடந்த ஏப்ரல் மாதம், தங்கள் உள்ளாடைகளை மண்ணில் புதைக்குமாறு சுவிட்சர்லாந்து முழுவதும் வாழும் மக்களை கோரியிருந்தன.
அதற்கு 1,000 பேர் வரை சம்மதிக்கவும் செய்தார்கள். இந்நிலையில், அந்த உள்ளாடைகள் தற்போது தோண்டி எடுக்கப்பட உள்ளன. இந்த ஆய்வின் நோக்கம், நாடு முழுவதும் உள்ள மண்ணின் தரத்தை ஆய்வதுதான். அதாவது புதைக்கப்பட்ட உள்ளாடைகளை தோண்டி எடுத்து, அவை எந்த அளவுக்கு மக்கிப்போயுள்ளன, அவற்றை மக்கச் செய்த பாக்டீரியம் எது என்பது போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளன.
ஆய்வுகளின் முடிவுகள் வெளியானதும், முடிவுகளின் அடிப்படையில் மண்ணை எப்படி வளமாக வைத்துக்கொள்வது என்பது தொடர்பான பரிந்துரைகள் அளிக்கப்பட உள்ளன.