இங்கிலாந்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் ஊரடங்கு தளர்வுகளை அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் அங்கு தற்போது அதிகரித்து வரும் டெல்டா வகை கொரோனா பரவலால் ஊரடங்கு தளர்வுகளை மேலும் ஒரு மாதத்திற்கு இங்கிலாந்து அரசு தள்ளிவைத்துள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 16,703 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதிக்குப் பிறகு அந்நாட்டில் ஏற்படும் அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். கொரோனா வைரசால் 21 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு பலியானோர் எண்ணிக்கை 1.31 லட்சத்தைக் கடந்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் இங்கிலாந்தில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது அங்கு செலுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகள், உருமாறிய கொரோனாவிற்கு எதிராக திறம்பட செயல்படக் கூடியது என்றும் விரைவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வரும் என்றும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.