‘குங்கும பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகமான ராஜமோகன் அடுத்து, ‘வானவராயன் வல்லவராயன்’ படத்தை இயக்கினார். சில வருட இடைவெளிக்குப்பின் இவர், ‘அட்ரஸ்’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்கிறார். இதுபற்றி இவர் கூறுகிறார்:
1956-ம் ஆண்டில் இந்தியாவை மொழிவாரி மாநிலமாக பிரித்தபோது, தமிழ்நாட்டுக்கும், கேரளாவுக்கும் நடுவில் சிக்கிக்கொண்டு தனது ‘அட்ரஸ்’சை தொலைத்த ஒரு கிராமத்தை பற்றிய கதை இது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இதில் நட்புக்காக, புரட்சிகரமான காளி என்ற இளைஞர் வேடத்தில் அதர்வா நடித்துள்ளார். இவருக்கு ஒரு பாடல் மற்றும் 2 சண்டை காட்சிகளும் உள்ளன. ஜோடியாக பூஜா ஜவேரி நடிக்கிறார். இவர்களுடன் இசக்கி பரத், தம்பி ராமய்யா, ஏ.வெங்கடேஷ், நாகேந்திரன், தேவதர்ஷினி ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மலையும், மலை சார்ந்த பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தி இருக்கிறோம். கொடைக்கானலில் இருந்து 8 கிலோ மீட்டர் நடந்து சென்று வெள்ளக்கவி என்ற கிராமத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கினோம். படத்தை அஜய் கிருஷ்ணா தயாரிக்கிறார்.’’