கடந்த சில நாட்களாகவே திருமணத்தில் நடக்கும் அசாம்பாவிதம் மற்றும் கூத்துகள் அரங்கேறி வருகின்றன.
அதிலும், வட இந்தியாவில் வித்தியாச வித்தியாசமான காரணங்களுக்காக திருமணங்கள் நின்று வரும் சம்பவம் பரபரப்பை கிளப்புகிறது.
அந்த வகையில், சமீபத்தில் ஒரு வித்தியாசமான காரணத்திற்காக திருமணம் நின்று போயுள்ளது. ஓடிசா மாநிலம் சுகிந்தா பிளாக் பாந்தகவன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராமாகாந்த் பத்ரா(27).
இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிற்கு திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து, திருமணத்திற்காக மணமகன் ஊர்வலமாக மண்டபத்திற்கு வந்தார்.
அங்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு பெண் வீட்டார் விருந்து ஏற்பாடு செய்திருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் விருந்து சாப்பிட அமர்ந்த போது அவர்களுக்கு மட்டன் பரிமாறவில்லை.
இதனால், அவர்கள் குறித்து கேட்டபோது தான் மட்டன் தயார் செய்யவேயில்லை எனக்கூறியுள்ளனர். இதையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாருடன் சண்டை போட்டனர்.
இந்த விவகாரம் மாப்பிள்ளை ராமாகாந்த் பத்ராவிற்கு தெரிந்ததும் அவர் திருமணத்தை நிறுத்திவிட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்.
மேலும், அவரை பெண் வீட்டார் எவ்வளவோ சமாதானம் செய்ய முயன்றும் கேட்கவில்லை. இறுதியாக மண்டபத்திலிருந்து மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் வெளியேறினர்.
வெளியேறிய மாப்பிள்ளை வீட்டார் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்று தங்கினர். அங்கேயே மாப்பிள்ளைக்கு உடனடியாக வேறு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என பேசி அங்கேயே வேறு பெண்ணை பார்த்து மறுநாளே அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் வீட்டிற்கு திரும்பினார் மாப்பிள்ளை.
இந்த சம்பவம் குறித்து பெண் வீட்டார் புகார் எதுவும் தெரிவிக்காததால் இது குறித்து விசாரணை எதுவும் நடைபெறவில்லை.