யாழ். மாநகரசபை அமர்வில் இன்று “நாய்” விவகாரம் சூடு பிடித்தது. இதனால், நகரசபை உறுப்பினர் ஒருவர் ஒரு மாதம் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று இடம்பெற்றிருந்த நிலையில் இதன்போது சர்ச்சையொன்று வெடித்தது.
யாழ். மாநகரசபை முதல்வர் வி.மணிவண்ணன் தனது மாதாந்த ஊதியத்தை பொது மக்களுக்கு வழங்குவதாக பகிரங்கமாக அறிவித்திருந்தார்.
பின்னர், தனது உதவியாளர் ஒருவருக்கு ஊதியத்தின் ஒரு பகுதியை வழங்குமாறு, நகரசபையிடம் எழுத்து மூலம் குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆவணத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் ரஜீவ்காந்த் பெற்று, தனது சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.
இன்றைய அமர்வின்போது, மாநகரசபை ஆவணத்தை அவர் எப்படி பெற்றார் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என முதல்வர் வி.மணிவண்ணன் கேட்டுக் கொண்டார்.
எனினும், அதை ரஜீவ்காந்த் மறுத்தார். அதை கேட்கும் அதிகாரம் முதல்வருக்கு உண்டா என கேள்வியெழுப்பினார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்த வி.மணிவண்ணன் தரப்பும், தமிழ் தேசிய முக்கள் முன்னணி தரப்பிற்குமிடையில் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது, வி.பார்த்தீபனை பார்த்து “நாய் மாதிரி குரைக்க வேண்டாம்” என ரஜீவ்காந்த் குறிப்பிட்டார். இந்த வார்த்தை அநாகரிகமானது, அதை மீளப்பெற வேண்டுமென வி.மணிவண்ணன் குறிப்பிட்டார்.
எனினும், அப்படியான வார்த்தையை தான் பாவிக்கவில்லையென ரஜீவ்காந்த் தெரிவித்ததையடுத்து, ஒளிப்பதிவுகள் ஆராயப்பட்டதில், அவர் அந்த வார்த்தையை பாவித்தது தெரியவந்துள்ளது.
இதன்பின்னரும், அந்த வார்த்தையை மீளப்பெறுமாறு முதல்வர் கேட்டுக்கொண்டார். எனினும், ரஜீவ்காந்த் மறுத்து விட்டார்.
இதையடுத்து, ரஜீவ்காந்த் மீது ஒழுக்காற்று பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது.
இதில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பு, ஈ.பி.டி.பி, ஐ.தே.க, தமிழர் விடுதலை கூட்டணியென்பன ஒழுக்காற்று நடவடிக்கையை ஆதரித்தன.
24 வாக்குகள் ஆதரவாக அளிக்கப்பட்டன. தமிழ் தேசிய கூட்டமைப்பும், மணிவண்ணன் தரப்பை சேர்ந்த வி.பார்த்தீபனும் நடுநிலை வகித்தனர்.
முன்னணியின் இரண்டு உறுப்பினர்கள் எதிராக வாக்களிததனர். இதன்படி, ஒரு மாதத்திற்கு சபை அமர்வில் கலந்து கொள்ள ரஜீவ் காந்திற்கு தடை விதிக்கப்பட்டது.
இதேவேளை, அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனை நாய் என விளித்து கருத்து தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.