ராஜபக்ச குடும்ப முகாமை சேர்ந்த எவர் வந்தாலும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வரவிருப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சம்பிக்க ரணவக்க, அவர் வந்த பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பாவர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் கூறினாலும் ராஜபக்ச குடும்ப முகாமை சேர்ந்த எவராலும் நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியாது எனவும் கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை அழித்தமைக்கான பொறுப்பை ராஜபக்சவினரே ஏற்க வேண்டும். பசில் ராஜபக்ச வந்தால், மீண்டும் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவார் எனக் கூறுகின்றனர்.
அப்படியானால் பசில் ராஜபக்சவின் மூத்த சகோதரர் நாட்டின் பொருளாதாரத்தை முற்றாக அழித்துள்ளார் என்பதே இதன் மூலம் உறுதியாகியுள்ளது.
பசில் ராஜபக்ச அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்காவிட்டாலும் அவரே அரசாங்கத்தின் தீர்மானகரமான நபர். அவரே வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவராக கடமையாற்றி வருகிறார்.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் நாட்டின் பதவிகளை வகிக்க முடியாது என்பதற்கான எதிர்ப்பை 20வது திருத்தச் சட்டத்தின் விவாதத்தின் போது முன்வைத்தேன்.
இந்த குற்றச்சாட்டில் இருந்து ஐக்கிய மக்கள் சக்தி விடுப்பட்டுள்ளது. இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் எவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லை எனவும் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.



















