இணையத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த மற்றும் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் துறவி ஒருவர் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இணையத்தில் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்த குற்றச்சாட்டில், கடந்த ஜுன் மாதம் 7ஆம் திகதி, கல்கிஸை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார். சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் மேற்கொண்ட விசாரணையைத் தொடர்ந்து இதுத் தொடர்பில் 17பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய், மற்றும் சிறுமியை விற்பனை செய்தவரின் முறைசாரா மனைவி, இரண்டு முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதிகள், சிறுமியை விற்பனை செய்த விளம்பரத்தை பதிவிட்டவர் உள்ளிட்டவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 17 பேரில் 11 பேர் பணத்தை கொடுத்து சிறுமியை பயன்படுத்திக்கொண்டுள்ளனர். துறவி ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடயமானது இலங்கையில் குற்றவியல் சட்டத்திற்கு அமைய பாரிய குற்றமாகும். இவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இவர்களை விட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த மேலும் 20 பேரின் விபரங்கள் குறித்து தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.




















