பல வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வரும் 1,000இற்கும் மேற்பட்ட சாதாரண தொழிலாளர்களை நிரந்தரமாக்காமால், புதிதாக ஆட்சேர்ப்பு செய்யும், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 1200 சாதாரண ஊழியர்கள் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் சுமார், ஐந்து வருடங்களாக தொடர்ந்து பணியாற்றி வருவதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களின் சேவையை நிரந்தரமாக்குவது குறித்து தமது தொழிற்சங்கம் தொடர்ந்து பரிந்துரைகளை வழங்கியிருந்தாலும், அது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என ஐக்கிய பொது சேவையாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நீல் விஜேதிலக தெரிவித்துள்ளார்.
அண்மையில் சாதாரண வீதி பராமரிப்பு தொழிலாளர்களாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஏராளமான ஊழியர்கள், பல்வேறு நிர்வாக மற்றும் பொறியியல் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள, நீல் விஜேதிலக இதற்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார்.
“குறைந்த பட்சம், தற்போதுள்ள சாதாரண தொழிலாளர்களின் தொழிலை நிரந்தரமாக்காமல், வெளியில் இருந்து ஊழியர்களை பணிக்கு அமர்த்துவது ஊழியர்களின் உரிமைகளை மீறுவதாக நாங்கள் கருதுகிறோம்.”
வீதி அபிவிருத்தி அதிகார சபையில் 1,200 சாதாரண ஊழியர்கள் காணப்படுவதோடு, அவர்கள் பல வருதொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
மேலும், நாடு முழுவதும் உள்ள நிர்வாக பொறியியல் அலுவலகங்களுடன் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து கவனம் செலுத்தி, தற்போது பணிபுரியும் ஊழியர்களின் சேவைகளை நிரந்தரமாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்தை ஐக்கிய பொது சேவையாளர் சங்கம் கோரியுள்ளது.