தமிழில் எந்த யூடியூப் சேனலும் செய்யாத சாதனையை வில்லேஜ் குக்கிங் சேனல் செய்துள்ளது.
ஆம், ஒரு கோடி சப்ஸ்கிரைபர்களை பெற்ற முதல் தமிழ் யூடியூப் சேனல் என்ற பெருமையை வில்லேஜ் குக்கிங் சேனல் பெற்றுள்ளது. இ
தையடுத்து, 1 கோடிக்கும் மேலான சப்ஸ்கிரைபர்களை பெற்ற சேனல்களுக்கு வழங்கப்படும் டைமண்ட் பட்டனை பெறும், முதல் தென்னிந்திய சேனல் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.
தமிழர்களின் மனம் கவர்ந்த சேனலாக இது உருவானதற்கு இந்த குழுவினரின் உழைப்பே காரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இந்தக் குழுவில் 6 பேர் உள்ளனர். விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த கிராமத்தில் வருடத்தில் 6 மாதம் விவசாயத் தொழில் புரிந்து விட்டு மீதமுள்ள 6 மாதங்களில் கிடைத்த வேலைகளைச் செய்து வந்துள்ளனர் இந்தக் குழுவினர்.
இந்த நிலையில், 2018ல் சோதனை முயற்சியாக Village Cooking சேனலை தொடங்கி அதில் சமையல் வீடியோக்களை பகிர்ந்துள்ளனர். இவர்கள் சமையல் நிகழ்ச்சியை பகிரக் காரணம் இந்தக் குழுவில் இருக்கும் பெரிய தம்பி என்னும் பெரியவர். கிராமத்துப் பகுதிகளில் சமையல் செய்யும் தொழில் செய்து வந்த இவரை வைத்து இந்தக் குழுவில் இருந்த மற்ற இளைஞர்கள் இந்த சேனலை ஆரம்பித்தனர்.
தங்களுக்கே உரிய வெகுளிப் பேச்சு, கிராமத்தின் மணம் மாறாத சமையல் முறையில், நல்ல பசுமையான இடங்களில் சமைப்பது போன்ற பல்வேறு காரணங்களால் இவர்களின் சேனல் குறுகிய காலத்திலேயே நல்ல ரீச் அடைந்தது.
இதேபோல், இவர்கள் தாங்கள் சமைக்கும் உணவுகளை ஏழை, எளியவர்களுக்கும் பகிர்ந்தளிப்பதும் இவர்களை மக்கள் மத்தியில் அறிய வைத்தது.
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழகம் வந்த ராகுல் காந்தி இவர்களுடன் சேர்ந்து சமையல் செய்ததும், அவர்களை ராகுல் வெகுவாக பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சேனல் தொடங்கிய 3 ஆண்டுகளில் தற்போது 1 கோடி சப்ஸ்க்ரைபர்களைக் கடந்து உள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளையும் பெறத் தொடங்கியுள்ளது இந்த குழு.
நேற்று டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இந்த சேனல் பெயர் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாராட்டு நேரத்திலும் மற்றுமொரு செயலை இந்தக் குழுவினர் செய்தனர். அது, தங்களது யூடியூப் சேனல் மூலம் பெற்ற வருவாயில் 10 லட்ச ரூபாயை கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர் இந்தக் குழுவினர்.
கையில் ஃபோன் வைத்திருக்கும் யார் வேண்டுமானாலும் யூட்யூபில் சேனல் ஆரம்பிக்கலாம் என்று இருக்கும் தற்போதையை நிலையில், சரியான இணைய வசதிகூட இல்லாத ஒரு கிராமத்தில் இருந்து வந்து VILLAGE COOKING CHANNEL என்ற சேனலை ஆரம்பித்து, தற்போது அதனை தென்னிந்தியாவிலேயே முதல் டைமண்ட் பட்டன் பெற்ற சேனலாக மாற்றி தமிழகத்தை திரும்பிப் பார்க்க வைத்துள்ளனர் இந்த குழுவினர்.