நீதி அமைச்சரால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் தொடர்பாக எந்த பிரச்சினையும் இல்லை, எனினும், இவை சிறிய திருத்தங்கள் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
20வது திருத்தச்சட்டத்தின் ஊடாக அனைத்து அதிகாரங்களும் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நீதிமன்றம் உள்ளிட்டவற்றின் சுயாதீனம் குறித்து விவாதிப்பதில் அர்த்தம் ஏதும் கிடையாது.
19ம் திருத்த சட்டத்தின் ஊடாக நாங்கள் நீதிமன்றத்தை பலப்படுத்தினோம். சுயாதீன ஆணைக்குழுக்களை ஏற்படுத்தினோம்.
எனினும், தற்போதைய அரசாங்கம் இதனை இல்லாமல் செய்துள்ளது. இதன் மூலம் சர்வதேசத்தின் பகையை அரசாங்கம் சம்பாதித்துள்ளது.
அரசாங்கம் பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளில் ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்க காங்கிரஸில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அமெரிக்க காங்கிரஸில் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இங்குள்ள பலருக்கும் தெரியாது. வடக்கு கிழக்கு மாகாணங்களை தமிழர்களின் பூர்வீக நிலமாக அங்கீகரிக்க வேண்டும் என அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.
இஸ்ரேல் எனும் நாடு இவ்வாறு தான் உருவானது. இந்நிலையில், அமெரிக்க காங்கிரஸில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை சாதாரணமாக கருதிவிடக் கூடாது” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.