அமெரிக்காவின் அயோவாவில் வசிக்கும் ஆப்கானிஸ்தான் மொழிபெயர்ப்பாளர் ஒருவர், ஒரு துண்டு ரொட்டியால் நாடுகடத்தப்படுவதை எதிர்கொள்கிறார்.
மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் இனி விவாதிக்க வாய்ப்பில்லை எனவும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையுடனான தொடர்பையும் அவர் இழந்துள்ளார்.
சல்மே நியாஸி அமெரிக்காவிற்கு திரும்புவதற்கு முன்னர் 2007 முதல் 2014 வரை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்திற்கு ஒரு மொழிபெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார்.
அமெரிக்கா திரும்பிய நியாஸி அதன் பின்னர் அயோவாவில் வசித்து வருவதுடன், புகலிட கோரிக்கையும் முன்வைத்து வந்துள்ளார்.
இந்த நிலையில், புகலிட கோரிக்கை தொடர்பில் அதிகாரிகளுடனான ஒரு நேர்காணலின் போது தலிபானுடனான முந்தைய தொடர்புகள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.
எதையும் மறைத்து வைக்க தேவையில்லை என கருதிய நியாஸி, தமது 9 வயதில் நடந்த சம்பவத்தை வெளிப்படுத்த, தற்போது அது வினையாக முடிந்துள்ளது.
தமது 9 வயதில் தலிபான்களில் சிலர் தங்கள் குடியிருப்புக்கு வந்ததாகவும், நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த தம்மிடம் ரொட்டி எடுத்துவர மிரட்டியதாகவும், வீட்டுக்கு சென்று தாயாரிடம் கூறி ஒரு துண்டு ரொட்டி வாங்கி வந்து அவர்களிடம் கொடுத்ததாக நியாஸி நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த நிலையிலேயே தமது புகலிட கோரிக்கை மறுக்கப்பட்டதாகவும், தீவிரவாத அமைப்புடன் தாம் தொடர்பு வைத்திருந்ததே அதற்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அமெரிக்காவுக்காக தீவிவாத அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் பல ஆண்டு காலம் உழைத்த தம்மை ஒரு ரொட்டி துண்டால் நாட்டை விட்டு வெளியேற்றும் நிலை தமக்கு வருத்தமளிப்பதாக நியாஸி தெரிவித்துள்ளார்.
மேலும், ஆப்கானிஸ்தானில் தற்போதைய சூழலில் செல்வது என்பது மரண தண்டனைக்கு சமம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.