இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 பேரை வலுக்கட்டாயமாக தனிமைப்படுத்திய அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு எதிராக நாளை முதல் இணையம் மூலம் கற்பித்தல் நடைமுறைகளை தவிர்க்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் முடிவெடுத்துள்ளது.
சங்கத்தின் தலைமை செயலாளர் மஹிந்த ஜயசிங்க இதனை கூறியுள்ளார்.
பத்தரமுல்லையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட 33 பேர் கொண்ட குழுவில் இருந்த பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் 15 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்ட சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக யோசனைக்கு எதிராக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு, ஆசிரியர் சங்கம் மற்றும் முன்னிலை சோசலிஸ்ட் கட்சி ஆகியன போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
இந்தநிலையில் தொழிற்சங்கங்களின் அதிகாரத்தை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவதன் மூலம் அடக்க முடியாது. ஆகையால், அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் இணைய கற்பித்தல் நடைமுறைகளைத் தவிர்க்க முடிவு செய்துள்ளன என்று ஜயசிங்க குறிப்பிட்டார்.